அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

களவாடப்பட்ட நிமிடம் - களத்தொகுப்பு 09-09-2011



பிஸ்மில்லாஹ்
ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ரியாத் மண்டல நிர்வாகிகள் நான்கு பேரிடம் சவூதி திருடர்கள் பணம், அலைபேசிகள், இக்காமா உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் காரை கொடூரமான ஆயுதங்களை காட்டி மிரட்டி பறித்துச் சென்றனர். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் களத்தொகுப்பு:
திகில் நிறைந்த அந்த நிமிடம்
வெள்ளிக்கிழமை 09.09.2011, அன்றைய இரவில் உறங்கியவர்களுக்கு மட்டுமா பொழுது விடிந்தது? உறங்காத எங்களுக்கும் சேர்ந்தே விடிந்தது! ஆம், அதிகாலை 4.30 மணியில் இருந்து காவல் நிலையத்தை தேடி அலைந்தோம்.
பத்தா காவல் நிலையம் நோக்கி நாங்கள் நால்வர் சென்றோம்; அங்கு இயங்கி வந்த காவல் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை அங்கு ஒட்டியிருந்த நோட்டீஸில் இருந்து அறிந்து, பத்தா தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பத்தா காவல் நிலையத்தை அடைந்தோம். நடந்த சம்பவத்தை கேட்டு விட்டு,  நீங்கள் தீரா காவல் நிலையம் சென்று புகார் கொடுங்கள் என்றார்கள். அங்கே சென்றோம்; சம்பவம் நடந்த இடம் எங்கள் லிமிட்டில் கிடையாது, முரப்பா காவல் நிலையம் செல்லுங்கள் என்றனர். எங்களை நாங்களே நொந்தவர்களாக முரப்பா காவல் நிலையத்தை காலை 9 மணிக்கு அடைந்தோம். இதற்கிடையில் காணாமல் போன அனைத்து ஆவணங்களின் பிரதிகளையும் அவரவர் வீட்டில் சென்று எடுத்துக் கொண்டோம்.
முரப்பா காவல் நிலையம்
முரப்பா காவல் நிலையம் சென்று, நடந்த விபரங்கள் மற்றும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை நாங்கள் கூற அனைத்தையும் கேட்டு எழுதிக் கொண்டார் அங்குள்ள காவலர் ஒருவர். பின்னர் கேப்டன் ஃபகீத்திடம் நடந்தவைகளை கூறி, வல்லோனிடம் துஃஆ செய்தவர்களாய் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி காலை 10.00 மணிக்கு வெளியேறினோம்.
இறைவனின் மறைமுக உதவி
காலை 10.30 மணிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரிடமிருந்து போன் கால் வருகிறது. உங்களுடைய இக்காமா ID என்னிடம் கிடைத்து உள்ளது என்று கூற, அவர் வரச்சொன்ன இடத்திற்கு நாங்கள் உடனடியாக சென்று சந்தித்தோம். கிங் அப்துல் அஜீஸ் யூனிவர்சிடி மருத்துவமனை அருகில் உள்ள குப்பை தொட்டி அருகில் கிடந்ததாக கூறி தந்துதவினார். நான்கு பேருடைய இக்காமாவும் தொலைந்த விபரத்தை சொன்னதும், அப்படியா இதை பாருங்கள் இதுவும் அங்குதான் கிடந்தது என்று காண்பிக்க, இது இன்னொரு நண்பருடைய ID என அவரிடம் சொல்லி அவருக்கு நன்றி கூறி வாங்கி வந்தோம்.
அன்று இரவு தாவூத் என்ற தமிழ் சகோதரர், குப்பை அள்ளும் பங்களாதேஷ்காரார் மூலம் கிடைத்ததாக கூறி எனது இகாமாவை என்னிடம் ஒப்படைத்தார். எனது அட்டையில் இருந்த தமிழக நம்பருக்கு அவர் தகவல் தெரிவித்து (என் மொபைல் களவாடப்பட்டுவிட்டதால் என்னை அவர் நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை), அவர்கள் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்கள் என்னிடம் நேரில் வந்து சொல்ல, அந்த தமிழ் சகோதரர் இடத்திற்கு சென்று வாங்கினோம். 

கதையின் நாயகன் லூமினா செவ்ரோலெட் கார்
அன்று நள்ளிரவு 11.15 மணிக்கு எங்ளுக்கு போன் ஒன்று வந்தது. பேசியபோது, உங்கள் கார் கிடைத்துவிட்டது; வந்து எடுத்து செல்லுங்கள் என்று ஒரு போலிஸ் சொன்னார். உடனேயே எங்களில் இருவர் அங்கு போய் காரை மீட்டு, அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தார்கள். காரை திருடியவன் ஓட்டிச் சென்றிருக்கிறான். அப்போது, ஒரு BMW காரின் மீது மோதிவிட்டு, நிற்காமல் ஓட்டிச் சென்றிருக்கிறான். சரியான முறையில் காரை ஓட்டாததால், ரோந்தில் இருந்த காவலர் நிறுத்த சொல்லியும் நிறுத்தாததால், மூன்று உயர் போலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பல வாகனங்களில் காரை விரட்டிச்சென்று முன் டயரை சுட்டு பஞ்சராக்கி, கார் நிலைகுலைந்துனொரு சுவற்றில் மோதி நிற்க, போலிஸார் சுற்றி வளைக்க, காருடன் திருடன் ஒருவனும் மாட்டிக் கொண்டான். ரோந்து சென்ற போலீஸார் காரையும், அடையாளம் காட்டப்பட்ட திருடனையும் மன்ஃபோஹா காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, கண்ணியமான முறையில் எங்களிடம் பேசி ஆறுதல் கூறி சென்று விட்டனர். அன்றைய இரவு பொழுது முழுவதும், அந்த காவல் நிலையத்திலேயே கழிந்தது.
மனிதநேயமிக்க கேப்டன் ஃபகீத்
மறுநாள் காலை 10 மணிக்கு முரப்பா காவல் நிலயத்திற்கு சென்றோம். திருடனை அடையாளம் காட்டுமாறு கேப்டன் ஃபகீத் சொன்னார், ஒவ்வொருவராக உள்ளே சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு பேரில் திருடனை சரியாக அடையாளம் காட்டினோம். அனைத்து விபரங்களையும் கேட்டு மீண்டும் எழுதிக் கொண்டார். உயர் அதிகாரி என்ற ஆணவம் இல்லாமலும், இவர்கள் வெளிநாட்டவர்கள்தானே என்ற ஏளனம் எதுவும் இல்லாமல் மிகவும் கண்ணியமாக செயல்பட்ட விதம் மனதிற்கு ஆறுதலை தந்தது. அத்துடன் கார் சரி செய்வதற்கு தேவையான சான்றிதழ்களை தந்து அனுப்பி வைத்தார்.
களவாடப்பட்ட நிமிடம்
08.09.2011 இரவு 9-30 மணிக்கு கூடி, 16 ந்தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு நிர்வாகத் தேர்வுக்காக நிர்வாகிகள் ஆலோசனை செய்து விட்டு, மற்ற நிர்வாகிகளை வழி அனுப்பிவிட்டு, காரில் செல்லும் முன் வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தக பெட்டியை எடுத்து வைத்துவிட்டு, ஃபஜர் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு போகலாம் என்பது எங்கள் திட்டம். ஒரு நிமிட நேரத்தில் செய்வதறியாது திகைத்துப் போனோம், ஃபஜர் பாங்கோசை கேட்க, இருட்டாக இருந்த அந்த தெருவில் நாங்கள் சென்று கொண்டிருக்க, காரில் வந்த நான்கு திருடர்கள், கடுமையான ஆயுதங்களுடன் எங்கள் நால்வரையும் வழி மறித்து. இருக்கும் பொருள்கள், மொபைல், இக்காமா, 1950 ரியால் ரொக்கம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டதுடன், காரின் சாவியையும் பறித்துக் கொண்டு அவர்கள் வந்த காரில் ஏறி போய்விட்டார்கள்.  நாங்கள் வந்திருந்த மற்றொரு காரில் வீட்டுக்கு சென்று மாற்று சாவியை எடுத்து வந்தால், காரையும் காணவில்லை. ரிமோட் சாவி என்பதால் போனவர்கள் திரும்பி வந்து ரிமோட் வசதியை பயன்படுத்தி (ரிமோட்டை அழுத்தினால் காரின் விளக்கு எரியும்) காரை களவாடிவிட்டனர். அதன் பின்புதான் ஒவ்வொரு போலிஸ் ஸ்டேஷனாக சென்றோம்.
முறையான நடவடிக்கை
தகவல்களை உரிய இடங்களில் புகார் மூலம் தெரியப்படுத்தியதால், அல்லாஹ் அத்திருடர்களை பிடிபடச் செய்தான். 10 நாட்கள் கழித்து 20.09.2011 அன்று நாங்கள் களவு கொடுத்த அனைத்திற்கும் (சேதமடைந்த காரை செப்பனிடும் செலவுகள் உட்பட) நஷ்ட ஈட்டினை திருடர்களின் குடும்பத்தாரிடம் இருந்து கேப்டன் பஹீத் வாங்கிக் கொடுத்து மனதிருப்தி அடைந்தீர்களா இல்லை இன்னும் நஷ்டஈடு வேண்டுமா எனக்கேட்க, நாங்கள் எங்களுடைய இழப்புகளுக்கான நஷ்டயீட்டில் கொஞ்சம் அதிகமாகவே தள்ளுபடி செய்து பணத்தை வாங்கிக் கொண்டோம். அல்லாஹ் கேப்டன் பஹீத் அவர்களுக்கும் எங்களுக்காக உழைத்த போலிஸாருக்கும் அருள்புரிவானாக. எங்களில் ஒருவரின் இக்காமா, இஸ்திமாரா, ருக்ஸா மற்றும் வங்கி அட்டைகள் இன்னும் கிடைக்கவில்லையாதலால் புதிதாக அவற்றைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அல்லாஹ்வின் கிருபையால், 27.09.2011 அன்று அனைத்தும் புதிதாக, அதற்குரிய செலவீனகளுடன் கிடைக்கப் பெற்றன.
கேலி பேச்சுக்கள்
நடந்த விபரத்தை கேள்விப்பட்ட சகோதரர்களில் ஆறுதல் சொன்னவர்களும் உண்டு, நீங்கள் நான்கு பேர் இருந்தும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையா? என்று கேலி பேசியவர்களும் உண்டு. அவர்கள் கூரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். எதற்கும் துணிந்தே வந்துள்ளனர். அது மட்டுமல்லாது இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உங்களின் உடைமை போனாலும் பரவாயில்லை; காயமில்லாமல் தப்பித்துக் கொள்ளவும்! என்று நாம் மக்களுக்கு அறிவுரையும் கூறி வந்திருக்கிறோம். காரணம் நாம் வெளிநாட்டில் உடல் காயம்பட்டு படுத்து இருந்தால், உடன் பிறந்த சகோதரராக இருந்தாலும் ஆறுதலை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் நாங்களும் சட்டப்படியான நடவடிக்கையே சரியான தீர்வு தரும் என்று நம்பினோம். நாங்கள் பத்தா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நிற்கும் போது, எங்களுக்கு முன்னால், ஒரு நேபாளி சகோதரர் ஒருவர், தலை-தோள்-முகம்-கைகளில் கத்தியால் வெட்டுப்பட்டு, கடுமையான காயங்களோடு தன்னுடைய உடைமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக புகார் அளித்துக் கொண்டிருந்ததே இதற்கு சான்று. அல்லாஹ் அந்த நம்பிக்கையை வீணாக்கவில்லை. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! யா அல்லாஹ் எங்களுக்கு சோதனையை தந்தாலும் அதை தாங்கிக் கொள்ளக் கூடிய மனோபலத்தை தருவாயாக! இன்னும் முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா
பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525
களத்தொகுப்பு - ரியாதிலிருந்து அரசூர் ஃபாரூக்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.