அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தொடரும் வளைகுடா அவலங்கள் - உணவு, குடிநீர் இன்றி 18 தமிழர்கள் உட்பட 70 இந்தியர்கள் ரியாதில் தவிப்பு 13-10-2011

"ந்தியாவிலிருந்து வளைகுடா கனவுகளுடன் வேலைக்கு வந்த 70  இந்தியர்கள் ரியாத் மாநகரில் உண்ண உணவின்றியும், குடிக்க நீரின்றியும் கடுமையான சிரமத்தில் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களை வேலைக்கு எடுத்து வந்த நிறுவனம் இன்னும் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு உள்ளது. உடனடியாக இவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யவும் " - என்ற தகவல்களோடு நாகூரைச் சேர்ந்த அன்சாரி என்ற சகோதரர் ரியாத் மண்டலத்தினை தொடர்பு கொண்டார்.

நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக, மண்டலச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக், தொலைபேசி மூலம் அழைத்த சகோ. அன்சாரியுடன் 12.10.2011 காலை 10 மணிக்கு,  ரியாத் மாநகரின் வட பகுதியில் உள்ள ஹக்கீக் சுலைமானியாவில், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஒதுக்குப்புறமான கேம்புக்கு உடனடியாகச் சென்றார்.

"அல்-ஜகரான் என்ற கிளீனிங் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் நாங்கள்.  ஒவ்வொருவரும் சுமார் 70 ஆயிரங்கள் வரை செலவு செய்து இங்கு வந்துள்ளோம். விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு இங்கு தங்க வைக்கப்படுள்ளோம். ஆனால், இன்னும் வேலை தரப்படவில்லை. தங்க இடம் தந்தால் போதுமா? உண்ண உணவின்றியும், குடிக்க தண்ணீரின்றியும் சுமார் 18 நாட்களாக பரிதவித்து வருகிறோம். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பாகிஸ்தானி டிரைவர் மட்டும், சில நாட்களுக்கு ஒரு முறை அந்த கேம்புக்கு வந்து, ஒரு சில சிறு உணவுப் பொட்டலங்களை விநியோகித்துச் சென்றுள்ளார். அதுவும் சிறு பொட்டலத்தை 5 பேர் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீர் கிடையாது. செலவுக்கும் எதுவும் தருவதில்லை." என்று பாதிக்கப்பட்ட சகோதரர்கள் தங்கள் ஆதங்கத்தையும், இயலாமையையும் கொட்டித் தீர்த்தனர். அவர்களின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அவர்களின் உடனடி தேவை "உண்ண உணவு" என்பதனை உணர்ந்து, மண்டலச் செயலாளர் அரசூர் ஃபாரூக், மண்டல பொருளாளர் ஃபரீத் ஆகியோர் மீண்டும் அந்த கேம்புக்குச் சென்று, அவர்களின் அவசரத் தேவைக்கான உணவுப் பண்டங்கள், குடிநீர் மற்றும் செலவுக்கு சவூதி ரியால்கள் என கொடுத்து உதவினர்.

மேலும், தற்காலிகமாக உணவு கொடுத்து உதவினால் மட்டும் போதாது; மாறாக அவர்களுக்கு நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாதிக்கப்பட்டோரின் பிரச்சனைகள் தீர, இந்தியன் எம்பஸியோடு நெருங்கிய தொடர்புள்ள சில பத்திரிகை எண்களை கொடுத்து தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மீண்டும் அவர்களை அடுத்த நாள் தொடர்பு கொண்ட போது, நீங்கள் வந்து உதவி சென்றவுடன், கொடுத்த தொலைபேசி எண்களுக்கு பேசிய பிறகு, பலரும் வந்து தற்போது உதவுகின்றனர். மேலும், இந்திய தூதரகத்திற்கு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் எங்களுக்கு வேலை தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவும் தண்ணீரும் தற்போது கிடைத்துள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.  தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.

இறைவா! எங்களுடைய எண்ணங்களைத் தூய்மையாக்கி, இந்த நற்பணிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக!

செய்தி:
ரியாத் ஃபெய்ஸல் & அரசூர் ஃபாரூக்
கவலை தோய்ந்த முகங்களுடன்


வளைகுடா கனவுகளில் மிதக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பாதிக்கப்பட்டோரின் இந்நிலைமை ஒரு பாடமாக அமைய வேண்டும். ஊரில் சுயமாக தொழில் செய்து பொருளீட்டுபவர்கள் எல்லாம், அந்த தொழிலை விட்டு விட்டு, வளைகுடா வசந்தத்தை எதிர்பார்த்து, அதிக அளவில் செலவழித்து இங்கு வருகின்றனர். இந்த பாலை மண்ணில் அவர்கள் எதிர்பார்க்கும் வசந்தம் இல்லை; மாறாக, பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்களைப் பிரிந்து, வெறும் வெறுமையே மிஞ்சும். விலைவாசி உயர்விற்கேற்ப இங்கு சம்பளம் ஏறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கால் வயிற்றுக் கஞ்சியானாலும், குடும்பத்தோடு தாயகத்திலேயே குடிப்பதையே பெருமையாக கருத வேண்டும். எவ்வளவோ தொழில் வாய்ப்புகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகின்றன. அதனை பயன்படுத்திக் கொள்ள நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முறையாக கல்வி கற்று, தகுதியோடு வளைகுடாவிற்கு பெரிய வேலைகளுக்கு குடும்பத்தோடு வருவதில் தான் சிறப்பு. அது இல்லாமல், எந்த வித கல்வியும் இன்றி, தொழிற்பயிற்சியும் இன்றி, சிறப்புத் தகுதிகளும் இன்றி, சாதாரண வேலைகளுக்கு வளைகுடாவிற்கு வரத் துடிப்பவர்கள் ஒரு கணம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளார்கள்.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.